வருக!! வருக!!

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

Thursday, March 1, 2012

தேனமுது

          திருவாசகம் என்றால் என்ன?? இந்நூலை யார் இயற்றியது?? இதன் தீவிர இரசிகர்கள் யாவர்?? யார் இது சைவரின் உயிர் நூல் என்று பரிசோதித்து உறுதி தந்தது?? இதை படித்த குமுகாயம் அல்லது வாசகர்கள் என்ன மாதிரியான பாதிப்பிற்கு உள்ளானார்கள்?? இவை யாவும் நான் இந்த நூலை படிக்க என்னும் பொழுது எழுந்த சில வினாக்கள்..
           ஒரு முறை ஜி.யு.போப் அவர்கள் "ஜட்ஜ்" நீதிபதி சுப்பிரமணிய ஐயருக்கு ஒரு கடிதம் வரைகின்றார். அக்கடிதத்தின் முதல் பக்கம் தண்ணீர் பட்டு எழுத்துக்கள் எல்லாம் கலங்கிய வண்ணமாய் தென்படுகின்றன. கடிதத்தில் ஜி.யு.போப் அவர்கள் எழுதுகின்றார்கள். "என்னை மன்னியுங்கள்..ஒவ்வொருமுறையும் நான் உங்களுக்கு கடிதம் எழுத முனையும் போது, ஒரு திருவாசக தொடருடன் தொடங்க எண்ணுகின்றேன்.. ஆனால் ஒரு முறை கூட அழாமல்(உருகாமல்) எழுத இயலவில்லை" என்று. அதற்கு பதில்  எழுதும் ஜட்ஜ் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் அதை நன்கு புரிந்து " திருவாசகம் எண்ணி வடித்த கண்ணிர் மிகப் புனிதமானது, ஆதலால் நான் அக்காகிதத்தை என் வழிபாட்டு அறையில் உள்ள கூத்தப் பெருமான் திருவடியில் வைத்து வணங்கி வருகின்றேன்" என்று பதில் எழுதுகின்றார்.. ஒரு பிற இன, மதத் தலைவர் திருவாசகத்தின் மீது இப்படி பற்றுக்  கொள்ள வேண்டிய காரணம் தான் என்ன?? தவிர காந்தி மகான், வள்ளல் பெருமான்,  அறிஞர் ராஜாஜி போன்றோர் தம் உயிரினும் மேலாக இவ்வரிய நூலை புகழக் காரணம் தான் என்ன..??
          திருவாசகம் சமயக்குரவர்கள் நால்வரில், முழங்கால் வரை வெண் வேட்டி பூண்டு, கையில் ஏடு வைத்து நிற்கும் திருமேனி கொண்ட மாணிக்கவாசகர் அருளிச் செய்தது. திருவாசகத்தில் ௬௫௮ (658) அருட்பாக்கள் உள்ளன. இப்பாடல்  தொகுப்பை  கைபடிவம்  செய்து உலகுக்கு அருளியது "திருசிற்றம்பலம் உடையான்". இதுவே நான் சொல்ல விரும்பும் மேலோட்டமான நூல் அறிமுகம்.. மற்றவற்றை அதன் பாடல்கள்  கண்டு அறிவோம்..
          இது இனியதொரு பயணாமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என் நூல் ஆய்வு பகுதியைத் தொடங்குகின்றேன்.. நான் குறிப்பிட்ட செய்திகளை மனதில் ஒருபுறம் வைத்த வண்ணம்,  இந்த நூலை ஆய்வு செய்வோம்.. இதன் இறுதியில், 'திருவாசகம்' வசித்தவர்களை  உருக்கியது  எப்படி என்பதை உங்களுடன் சேர்ந்து நானும் உணர விரும்புகின்றேன்.. நன்றி..
          

Saturday, February 25, 2012

சைவரின் உயிர் நூல்..

வணக்கம். நீண்ட ஓய்வுக்கு பின் மீண்டும் எழுத வேண்டும் என்கின்ற உத்வேகம் என்னுள் இன்று பிறந்திருக்கின்றது. இதற்கு நான் இன்று சந்தித்த, எனக்கு மிகவும் பழக்கமான அய்யா சைவப்பெரியார் சோ.சோ.மி அவர்கள் என்றுதான் சொல்ல வேணும். அய்யா அவர்களது படம் இந்த கட்டுரையுடன் இணக்கப்பட்டுள்ளது. திரு இராமலிங்கேசுவரர் ஆலயம் மலேசியாவில் மிகவும் நன்கு அறிமுகமான  திருக்கோவில் ஆகும். சிவாகமப்படி அமைக்கப்பெற்ற திருக்கோவில் என்று சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இத்திருக்கோவில் ஜாலான் மாரோப்,பங்சார்,கோலாலம்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இருபது நாள்களுக்கு முன்பு திருக்குடமுழுக்கு நடந்ததை ஒட்டி மண்டலாபிசெகம் நடைபெறும் வகையில் தமிழ் நாட்டு சைவச்சான்றோர்கள் வந்தவன்னமாகவும் பொழிவு செய்தவன்னமாகவும் இருக்கின்றனர். அதில் ஒருவரே அய்யா அவர்கள்..
 அய்யா அவர்களின் பொழிவுக்கு பின் இன்று முதல் நான் ஒரு நாளுக்கு ஒரு திருவாசக பாடலை படித்துணரலாம் என்றே முடிவு செய்துள்ளேன்.  அய்யா அவர்கள் சைவரின் உயிர் நூல்கள் திருவாசகம் மற்றும் திருமந்திரம் என்று குறிப்பிட்டார்கள். வாசகர்கள் பலர் மனதில் 'ஏன் அப்படி?'  என்ற வினா எழும்பியிருக்கும். இனிதே 'தேனமுது' என்ற தலைப்பில் திருவாசகத்தின் சிறப்பைச்சொல்லும் விரிவுரையுடன் தொடங்குகிறேன்..